நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!!
நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பல முக்கிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் செல்வதற்கும், 10ம், 12ம் வகுப்பு 2வது திருப்புதல் தேர்வுகளுக்காக பள்ளிக்குச் செல்லவும் பொதுமக்களும், மாணவர்களும் பேருந்துகள் இயக்கப்படாது கண்டு ஏமாற்றமுடன் காத்திருந்தனர்.
நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று நடைப்பெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்றும், நாளையும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வருட கடைசி வருமான வரி தாக்கல் செய்வது உட்பட பல வங்கி வேலைகள் இருப்பதால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். எல்.ஐ.சி. உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பணிகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆட்டோக்கள் இந்த இரு தினங்களிலும் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உட்பட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம் தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இன்றும், நாளையும், பணிக்கு வராதவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக முதன்மை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னையில் மட்டுமே இன்று 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று தலா 5 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்களையும், மறியல்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து சென்னையில் சுமார் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தியா முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதால் மத்திய , மாநில அரசு பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் பேருந்துகள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே அதாவது 10 முதல் 20 சதவிகித எண்ணிக்கையிலேயே இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பினார்கள். சென்னை திருவான்மியூர் பணிமனை உட்பட சில பணிமனைகளில் பேருந்துகள் முழுவதுமே இயக்கப்படாமல் இருந்தன. இன்று பொதுத்தேர்வு துவங்குகிற நிலையில், பயணிகளும், மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலை நாளாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதி மக்கள்கடும் அவதியடைந்துள்ளனர். பேருந்திற்காக மக்கள் காத்து நிற்கின்றனர். ஆனால் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் பேருந்துகள் எதுவும் செயல்படவில்லை. சென்னையில் தாம்பரத்தில் வழக்கமாக இயங்கும் 180 பேருந்துகளில் 4 பேருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தத்தில் தமிழகத்திலும் பல சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. அதன் படி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மக்களின் தேவைகளை பொறுத்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாலும், எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பணியினை நாளை தொமுச சங்க உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment